ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1-ஆம் தேதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 10 டன் அரிசி மற்றும் 700 கிலோ கோதுமை இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் பழனி பகுதியை சேர்ந்த சார்புதீன் என்பவர் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சார்புதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சார்புதீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவே குண்டர் சட்டத்தின் கீழ் சார்புதீனை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.