பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 1 டன் குட்கா இருந்துள்ளது. இதன் மதிப்பு 6 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். இதனையடுத்து வேனில் இருந்த மூன்று நபரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி பகுதியில் வசித்து வரும் லட்சுமணன்,பழைய தர்மபுரி அருகே உள்ள நாகசேனஅள்ளி பகுதியில் வசித்து வரும் தமிழழகன்,மணிகண்டன் ஆகியோர் என தெரிய வந்தது. இந்த 3 நபர்கள் பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்த முயன்றதாக காவல்துறையினருக்கு தெரியவந்ததால், அவர்களை கைது செய்தனர்.
இதனிடையே தப்பியோடிய டிரைவரையும் வேனின் உரிமையாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் குட்கா கடத்த பயன்படுத்திய சரக்கு வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்து குட்கா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.