குண்டம் திருவிழாவை முன்னிட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் சிறப்பாகத் தொடங்கியது.
இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி பூக்குண்டம் திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த திருவிழாவிற்காக 22-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை சுங்க பாதையின் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் கர்நாடகாவிற்கு செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பேனர்கள் பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி இருக்கும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.