ஜோதிடர் ஜாதகம் சரியில்லை என கூறியதால் காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி சாமி நகரில் ஓட்டுநரான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால் டாக்ஸி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலைபார்த்த மலர்விழி என்ற பெண்ணும் ரவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அந்த ஜோதிடர் ஜாதகம் சரியில்லை என கூறியுள்ளார். அதனை மீறி திருமணம் செய்து கொண்டால் உங்களது வாழ்க்கை சரியாக அமையாது என ஜோதிடர் கூறியதாக தெரிகிறது.
இதனால் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ முடியாது என நினைத்து மன உளைச்சலில் இருந்த மலர்விழி கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் காதலி இறந்த துக்கத்தில் ரவியும் தனது வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.