ஆசிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நேற்று தமிழகத்தில் 25-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது, “சென்ற ஏழு நாட்களாகவே கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்து இருக்கின்றது. எந்த உயிர் இழப்பும் இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் அங்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆசிய நாடுகளில் அதிகம் பரவி வருவதால் தமிழகத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான்.
மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றது. தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி படிக்கும் போது அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி பயின்று பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஐந்தாண்டுகளுக்கு பிறகு முப்பது லட்ச மாணவிகள் பட்டதாரியாக உருவாவதற்கு இந்தத் திட்டம் அடித்தளமாக இருக்கும், இந்த திட்டமானது தங்கத்தையும் தாண்டி மாணவிகளை வைரமாக்கும் நல்ல திட்டம்” என்று கூறியுள்ளார்.