பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தங்களை முழுமனதோடு அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பசுமை சாம்பியன் என்ற விருதை 100 பேருக்கு வழங்க உள்ளது.
மேலும் தலா 1 லட்ச ரூபாய் வீதம் பணமுடிப்பு சேர்த்து வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்,நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர்நிலைகளின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் காற்று மாசை குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பதற்கும் விருது வழங்கப்பட இருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளில் சுற்றுச்சூழலை பாதுகாத்து மற்றும் விழிப்புணர்வை மக்களிடத்தில் சிறப்பாக தங்களது மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விருதினை பெற தகுதியானவர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு நாகர்கோவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் எனவும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.