கல்வி அமைச்சரின் உறவினர் என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பட்டி பகுதியில் தாமஸ் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஆனந்தகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தகுமார் தாமஸ் ஆல்பர்டிடம் கல்வி அமைச்சரின் உறவினர் எனக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய தாமஸ் ஆல்பர்ட், சுரேஷ், மருதமுத்து மற்றும் ராஜா ஆகியோர் மொத்தமாக 11 3/4 லட்ச ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் ஆனந்தகுமார் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அரசு வேலை எதுவும் வாங்கித் தராமல் இருந்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமஸ் ஆல்பர்ட் இது பற்றி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.