கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் ரதீஷ் ஹரி என்பவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ் ஹரி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நாச்சான்குளத்தில் இருக்கும் சாஸ்தா கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனை அடுத்து சாமி கும்பிட்டுவிட்டு ரதீஷ் ஹரி தனது குடும்பத்தினரை சொந்த ஊரில் இறக்கி விட்டுள்ளார். அதன் பிறகு உறவினர்கள் சிலரை அழைப்பதற்காக ரதீஷ் ஹரி காரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் காக்கை குளம் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதீஷ் ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரதீஷ் ஹரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.