குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார்.
இதனை கேட்ட அங்குசாமி அந்த குளிர்பான பாட்டிலை திறந்து பார்த்தபோது அதில் தென்னை மரத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்து என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கவினை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து எஸ்.பி. பட்டினம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகனை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.