மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் குமார் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் செல்வம் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்றுள்ளார். இவர் பாவூர்சத்திரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயம் அருகில் சென்று கொண்டிருந்த போது கண்ணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குமார் செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குமார் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.