வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அடுத்துள்ள நல்லிருக்கை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின்கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து வேலு அணிந்திருந்த 1 1/2பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்மநபர் மாயமானார். இச்சம்பவம் குறித்து வேலு திருஉத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.