வீட்டின் முன்பு கிடந்த குளிர்பானத்தை குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் மணிவண்ணன்- தொப்பபாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன் என்ற மகனும் ரக்ஷனா என்ற மகளும் இருந்தனர். இவர்களின் வீட்டிற்கு முன்பாக குளிர்பானம் கிடந்துள்ளது. இதை மணிவண்ணனின் தாயார் லட்சுமி எடுத்துக் குடித்துள்ளார். அதை ரக்ஷனாவிருக்கும் குடிப்பதற்கு கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரக்ஷனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து லட்சுமிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த கிராமமக்கள் வடபொன்பரப்பி காவல்நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடம் குளிர்பானம் குடித்து 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக கூடிய விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்களித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.