நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடாமங்கலம் எம்ஜிஆர் நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது.
இதனால் மின் கம்பிகள் குடிசை வீடுகளில் செல்வதால் எந்த நேரத்திலும் மின் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர். இதற்கிடையே வேகமாக காற்று வீசும் நேரத்தில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறந்து குடிசை வீடுகளில் விழுகிறது. இதனால் அடிக்கடி குடிசைகள் தீ பற்றி எரியும் சம்பவமும் நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான முறையில் உள்ள மின் கம்பத்தை மின் கம்பிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.