ஏரியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான சங்கர் என்பது தெரியவந்தது. இவர் மீன்பிடிப்பதற்காக ஏரிக்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.