தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நுாற்றாண்டு முதல் நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1955 ஆம் வருடத்துக்கு முன்பு “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டு தான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டது. இதையடுத்து 1955 ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினை கலைஞர் நாதஸ்வரத்தில் சுத்த மத்தியமம் ஸ்வரம் கண்டுபிடித்து, அதனை நாதஸ்வர கருவியாக உருவாக்கினார்.
இந்நிலையில் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது 1955 ஆம் ஆண்டு நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் ரங்கநாதன், ஆச்சாமரத்தில் இருந்து எளிமையாக வாசிக்கும் வகையில் உருவாக்கிய நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம் உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் நாதஸ்வரத்துடன் சேர்த்து 10 பொருட்களுக்கு புவிசார் கிடைத்த மாவட்டமாக தஞ்சை விளங்குகிறது.