சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் காவல்துறையினர் மட்டப்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மட்டபாறை கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் தங்கதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது காவல்துறையில் 5 சாராய வழக்குகள் நிலுவையில் இருந்தது. எனவே போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தங்கதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவே தங்கதுரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.