2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்ற நோக்கத்தில் “இன்னுயிர் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது என்று பேரவையில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் 33,000 குடும்பங்கள் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரையிலும் இத்திட்டத்திற்காக 29 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.