சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 230 கோடியில் 6 தளங்களில் 1000 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்படவுள்ளது. 122 வருடங்கள் பழமையான இந்த ஆய்வகம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மக்களை காக்க பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலுள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு கட்டப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.