ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது.
மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார்.
மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இதற்காக கடந்த சில வாரங்களாக அவர் பல்வேறு துறை பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் மோடியும் தனது செயலியில் ஆலோசனை கூறுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பொருளாதார மந்தநிலை நிலவும் நேரத்தில், இந்த ஆண்டு பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
பொது பட்ஜெட்டிலேயே ரெயில்வே பட்ஜெட்டும் அடங்கி இருக்கும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, அதன் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசுவார். பின்னர், பட்ஜெட் நிறைவேற்றப்படும்.
ஏப்ரல் 3-ந் தேதிவரை, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.