குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 18-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையாக போராடினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மேயர் மகேஷ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அவர் தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த பகுதியில் இருக்கும் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகிறது எனவும், கூடிய விரைவில் அனைத்து குப்பைகளும் சுத்தம் செய்யப்படும் என கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, மாநகர நல அதிகாரி டாக்டர் விஜயசந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.