முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் முன் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். அதன்பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை மார்ச் 22ஆம் தேதியும் விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.