கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அமைந்துள்ள மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட நிதி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால் தமிழக அரசு கர்நாடகாவின் இந்த செயலுக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் ஒன்று மேகதாது அணை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் உரையாற்றியபோது, “மேகதாது அணை தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றை நமது நீர்வளத்துறை அமைச்சர் கொண்டுவந்து அதனை அரசியல் கட்சிகள் எந்த பேதமும் இன்றி ஒருமனதாக முன்மொழிந்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதை ஏற்காது. உச்சநீதிமன்றம் அளித்த இறுதியான தீர்ப்பிற்கு பிறகும் அதனை எதிர்த்து அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடுவதை தமிழக அரசு கண்டிப்பாக தடுக்கும். ஒன்றிய அரசும் கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மேலும் நம் தமிழக அரசு உழவர்களின் நலனையும் காவிரியின் உரிமையும் கண்டிப்பாக பாதுகாக்கும் எல்லா வகையிலும் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை எதிர்ப்போம் தமிழகத்தின் உரிமையில் அனைவரும் ஒன்றாக நிற்போம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என கூறியுள்ளார்.