பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கெண்டையன்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகே பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.