உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குல்தீப் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்தார்.
அவர் மீதான புகார் விசாரணையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் குல்தீப் செங்காரை தனது கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. இந்நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 25 லட்சம் ரூபாய் அபராதத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு குல்தீப் செங்கார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், குல்தீப் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் குல்தீப் செங்கார் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.