சாலையை முழுமையாக போடாமல் போலி ஆவணம் தயார் செய்து 13 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துளசாபுரம் ஊராட்சியில் கண்டிவாக்கம் கிராம காலனியில் இருந்து மயானம் வரை 3 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்க கடந்த ஆண்டு 13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் நடைபெற்றது. இந்த சாலை பணிக்கான டெண்டரை எடுத்தவர் தார்சாலை அமைக்காமல் போலி ஆவணங்கள் தயார் செய்து சாலை பணி நிறைவடைந்து விட்டதாக அறிக்கை கொடுத்துள்ளார்.
அனால் தார்சாலை இன்றுவரை அமைக்கப்படவில்லை. எனவே போலி அறிக்கை மூலம் 13 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி போலி அறிக்கை கொடுத்த காண்ட்ராக்டர் மற்றும் இன்ஜினியர் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார்.