கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனமாகும். கோவை மாவட்டம் பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு 25 சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் புதிய கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது ஒரே நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறோம். ஆனால் ஒரே சம்பளத்தை தான் இதுவரை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஊதிய விகிதம் மற்றும் ஊதிய உயர்வு என எதுவும் அமலாக்கப்படவில்லை. இதைப்போல் இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்ற எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. மேலும் ஓய்வறை, கழிவறை, குடிநீர், சீருடை என எந்த ஒரு வசதிகளும் வழங்கப்படாமல் கொத்தடிமைகள் போல் கடந்த 30 ஆண்டுகளாக எங்களது உழைப்பை சுரண்டி வருகிறார்கள்.
எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து கோவை ஆட்சியரிடம், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.