பதினேழு கலைஅறிவியல் கல்லூரிகள் வருகிற கல்வியாண்டில் புதிதாக துவங்கப்படுமென உயா் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி அவர்கள் சட்டப்பேரவையில் கூறினார். அதாவது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பான வினாவை திமுக உறுப்பினா் சீ.கதிரவன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி பதில் அளித்தபோது, தமிழ்நாடு அரசின் சாா்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சாா்பாக ஒரு கல்லூரியும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. அறநிலையத் துறையால் முன்பே 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து தொடங்கப்படுகிறது. அரசு கலை, அறிவியல் கல்லூரி மட்டுமின்றி தொழில் கல்வி படிப்போருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசுகலை, கல்லூரிகளில் பெண்கள் அதிகமாக படிக்கின்றனா். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் சேருவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டே மாதம் 1000 ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தொழில் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அமைச்சா் க.பொன்முடி பதிலளித்தாா்.