துபாயில் வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த 3 பெண்களுக்கு, 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
துபாய் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஐரோப்பா நாட்டை சேர்ந்த பெண்ணுடைய பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 வருடமாக வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தனர். இச்சூழ்நிலையில் அந்தப் பெண் ஒரு நாள் அந்த வாலிபனை நேரில் பார்ப்பதற்காக தனியார் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். இதற்கு அந்த வாலிபர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த பெண் வாலிபரை தனது அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடியுள்ளார். அந்த அறையில் ஏற்கனவே இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.
இந்த மூன்று பெண்களும் சேர்ந்து வாலிபரிடம் 120 திர்ஹாம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்த ஆயிரம் திர்ஹாமை எடுத்துக்கொண்டனர். மேலும் அந்த வாலிபரின் ஆடைகளை கழட்டி ஆபாச வீடியோ எடுத்துவிட்டு அந்த பெண்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து அந்த வாலிபர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் தனியார் ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி மூன்று பெண்களையும் கைது செய்தனர். இவ்வழக்கு குறித்து விசாரித்த துபாய் நீதிமன்றம் அப்பெண்களுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.