சென்னையில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற “நம்ம ஊர் திருவிழா” கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
சென்னையில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பண்டிகையை ஒட்டி “சென்னை சங்கமம்” என்ற பெயரில் வீதிகள் தோறும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதைப்போல் கடந்த பொங்கல் பண்டிகையின்போது “நம்ம ஊர் திருவிழா” என்ற பெயரில் ஜனவரி 15, 16 ,17 ஆகிய மூன்று தினங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின் கடைசி நேரத்தில் கொரோனா பரவல் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஒத்திவைக்கப்பட்ட நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி தற்போது நேற்று சென்னை தீவுத்திடலில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, தமிழ்மொழியின் தொன்மையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக இந்த விழாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தியுள்ளார். சென்னையில் “வீதிகள் தோறும் சங்கமம்” என்ற பெயரில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கனிமொழி எம்.பி முன்னெடுத்து இந்த கலைத் திருவிழாவை நடத்திவைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்பின் அவர்களுடைய அங்கீகாரம் மறைய தொடங்கியதால் அதனை மீண்டும் கொண்டுவருவதற்காக “நம்ம ஊர் திருவிழா” என்ற பெயரில் மு.க ஸ்டாலின் கலை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவ்விழாவின் நோக்கம் குறித்து சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளருமான பி.சந்திரமோகனும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவரும் பேசியுள்ளார்கள். இவ்விழாவிற்கு வந்தவர்களை கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் சுற்றுலாத் துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனி செயலாளர் உதயச்சந்திரன், தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில் திரைப்படப் பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன், அந்தோணிதாசன், பாடகிகள் சின்ன பொண்ணு, மாரியம்மா ஆகியோர் கிராமிய பாடல்களைப் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
மேலும் “டிரம்ஸ்” சிவமணி தனது இசை மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்திள்ளார்.இதை தொடர்ந்து கிராமிய மணம் கமழும் அம்மன் ஆட்டம், பறையாட்டம், கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதேபோன்று கட்டைக்கூத்து, கொம்பு இசை, மகுடம் இசை, துடுப்பு மேளம் என பல வகை கிராமிய இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த விழாவில் 400க்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று பார்வையாளருக்கு இசை விருந்து வைத்துள்ளனர்.