Categories
டெக்னாலஜி பல்சுவை

36,000,00,00 பேர்…. தொடுடா..! பாக்கலாம்…. யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் ஜியோ …!!

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:

வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது.

ஒட்டுமொத்த தொலைத்தொடர்பிலும் ஆதிக்கம் செலுத்தும் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தைவிட 2.43 விழுக்காடு குறைந்து நவம்பர் மாதம் 115.43 கோடியாக உள்ளது. ஒரு மாதத்திற்குள் வோடபோன் நிறுவனம் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாறாக ரிலையன்ஸ் ஜியோ 56 லட்சம் வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 16.59 லட்சம் வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் 3.41 லட்சம் வாடிக்கையாளர்களையும் புதிதாக இணைத்துள்ளார்கள். அக்டோபர் மாதம் மோடம் மூலம் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.14 கோடியிலிருந்து நவம்பர் மாதம் 2.12 கோடியாக குறைந்துள்ளது.

இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 1.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 98.3 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 43 ஆயிரத்து 198 புதிய இணைப்புகளுடன் ஜியோ மொத்தமாக 10.23 லட்சம் இணைப்புகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 2.67 விழுக்காடு உயர்ந்து 66.12 கோடி இணைப்புகளாக உள்ளன.

பங்குச்சந்தையில் 98.99 விழுக்காடு பங்குகளை முதல் ஐந்து இடங்களிலிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ 37 கோடி வாடிக்கையாளர்களையும், பாரதி ஏர்டெல் 13.99 கோடி வாடிக்கையாளர்களையும், வோடபோன் 11.98 கோடி வாடிக்கையாளர்களையும், பிஎஸ்என்எல் 2.25 கோடி வாடிக்கையாளர்களையும், ஏட்ரியா கன்வர்ஜன்ஸ் 15 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Categories

Tech |