திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகே எஸ்.வி பாளையம் கிராமத்தில் பிரியா (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இதன்காரணமாக பிரியா பாட்டி ஆதிலட்சுமி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதே ஊரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பிரியாவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவகுமார் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் பிரியா கர்ப்பம் அடைந்துள்ளார். இதன்காரணமாக பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவக்குமாரிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் சிவகுமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து பிரியாவிடம் கருவை கலைக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரியா மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் சிவகுமாரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அதன்பிறகு சிவக்குமார் பிரியாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரியாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதன்காரணமாக சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் பிரியாவை அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் ஒரு மாதமாகியும் பிரியாவை சென்று பார்க்கவில்லை. இந்நிலையில் பிரியா கடந்த 19-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.