தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் தனது மூன்று வயது ஆண் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பெண் யார் என்று விசாரித்தபோது அனுமந்தபுரத்தை சேர்ந்த 28 வயதான சபி என்பவரும், குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளிக்க முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாப்பாரப்பட்டி அருகில் பாடி பகுதியை சேர்ந்த 45 வயதான விஜயகுமார். இவரும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கும் உறவினருக்கும் ஏற்பட்ட தகராறில் சிலர் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீக்குளிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதே மாதிரி மத்தளபள்ளத்தை சேர்ந்த 48 வயதான முனியன் என்பவரும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது 4 வருடங்களுக்கு முன்பு சிலரிடம் பணம் கடன் வாங்கியதாகவும் அந்தப் பணத்தை திருப்பி கொடுத்த பிறகும் அதற்குரிய ஒப்பந்த பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீக்குளிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பாக நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.