தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-2022 ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சில நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். மேலும் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். இது குறித்து வெளிவந்துள்ள பல்வேறு ஊடக ஆதாரங்களின் அடிப்படையில் பொருத்துதல் காரணியை உயர்த்த அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் எனவும் ஊழியர் சங்கங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணியை அரசு அதிகரித்து அறிவித்தால் அதன்விளைவாக அவர்களின் சம்பளம் உயரும். தற்போது ஊழியர்கள் 2.57 % ஃபிட்மென்ட் பேக்டரின்படி சம்பளம் பெறுகிறார்கள். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளத்தில் ரூபாய் 8,000 அதிகரிப்பு இருக்கும்.
கணக்கீடு
மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் காரணியை 3.68ஆக அதிகரித்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூபாய் 26,000 ஆக உயரும். அந்த அடிப்படையில் 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் ரூபாய் 18,000 எனில், அலவன்ஸ்கள் இன்றி ரூ.46,260 (ரூ. 18,000 X 2.57 = 46,260) வரை கிடைக்கும். தற்போது பிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் சம்பளம் ரூபாய் 95,680 (26000X3.68 = 95,680) ஆக இருக்கும். அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.49,420 (95,680 – 46,260) ஆக அதிகரிக்கும்.
இதற்கு முன்பாக மத்திய அமைச்சரவை ஜூன் 2017 -ல் 34 மாற்றங்களுடன் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி தொடக்கநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் கீழ் வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதத்திற்கு ரூபாய் 7,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் உயர்நிலையில் செயலாளர் பதவியில் உள்ள ஊழியர்களுக்கு ரூபாய் 90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக ஊதியம் உயர்ந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக வகுப்பு 1 அதிகாரிகளுக்கு ஆரம்ப சம்பளம் ரூபாய் 56,100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.