ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் தென் கொரியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 980 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரையிலும் அங்கு 99 லட்சத்து 36 ஆயிரத்து 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .
மேலும் கொரோனா உயிரிழப்பும் தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி இதுவரையிலும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் மட்டும் 384 பேர் தொற்றுக்கு பலியாகினர். அதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 13 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று வியட்நாமில் நேற்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 735 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதன் வாயிலாக அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்து 38 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.