நசியனூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் நசியனூரில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 21 குடும்பங்கள் வசித்து வந்தது. இந்நிலையில் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் சம்பந்தப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த இடத்தில் குடியிருந்தவர்கள் நாங்கள் 60 ஆண்டு காலமாக குடியிருப்பதாகவும், பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறி கோவிலுக்கு அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாங்கள் குடியிருந்து வருகின்ற இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நாச்சிமுத்து தலைமையில் கோவிலுக்கு அருகில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு விடியவிடிய போராட்டத்தை நடத்தினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, ஈரோடு தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக நேற்று காலை நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா, துணைத் தலைவர் பத்மநாபன், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் இவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இந்த பிரச்சினை குறித்து பேசியதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர் முத்துசாமி செல்போனில் பொதுமக்களிடம் பேசியுள்ளார். அவர் தான் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்து விட்டேன் என்றும், வருகின்ற 25 ஆம் தேதி ஈரோடு வந்து உங்களுடைய பிரச்சனையை பேசி தீர்ப்பேன் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.