அரசு பள்ளியில் ஆசிரியர் பள்ளிக்கு வராமல் ஊதியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே தாளக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் பழனிச்சாமி தினந்தோறும் காலையில் பள்ளிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இவருக்கு பதிலாக பாடம் நடத்துவதற்காக ஒரு பெண்ணை பள்ளிக்கல்வி துறையின் அனுமதி இல்லாமல் பழனிசாமி நியமித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்ந்து 2 வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவர் பழனிச்சாமி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் ஆசிரியர் பழனிச்சாமி இதற்கு முன்பு திருப்பைஞ்சலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த பள்ளியில் பழனிசாமி முறைகேடாக நடந்து கொண்டதால் கிராமமக்கள் ஆசிரியர் பழனிச்சாமியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாகவே ஆசிரியர் பழனிச்சாமி தாழக்குடி கிராமத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.