விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகரில் ஏற்கனவே குடிநீர் உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 13 கிரிமினல் வழக்குகள், குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் 2 வழக்குகளில் அபராதமும் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் குறைகள் கண்டறியப்பட்டு குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய குடிநீர் உணவு மாதிரிகள் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவு மூலம் நிறுவனங்கள் மீது நீதிமன்றம் வழக்கு தொடரப்படும். இந்நிலையில் பொதுமக்கள் குடிநீர் பாட்டில் மற்றும் 20 லிட்டர் கேன்களில் வாங்கும் போது தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் மற்றும் 20 லிட்டர் கேன்களில் ISI மற்றும் FSSAI என் இல்லை என்றால் அதனை உடனடியாக போலி குடிநீர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.எனவே குடிநீர் தரம் மற்றும் உணவு கலப்படம் பற்றிய புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் அப் புகார் எண்: 9444042322 என்கிற எண்ணுக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலக 04562-225255 எண்ணுக்கோ புகார்கள் அளிக்கலாம். இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்