பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்களிடம், இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாகரீகம், தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் கொள்ளைகளும் அதிகமாக நடக்கிறது. தொடக்கத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிக் கொள்ளைகள் என பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. இந்த சம்பவம் குறைந்து தற்போது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடு போவது அதிகமாகிவிட்டது.
வங்கியிலிருந்து இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கிகணக்கு, ரகசியம் எண் ஆகியவற்றை அறிந்துகொண்டு அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர். மேலும் பொதுமக்களின் செல்போனுக்கு லிங்க் அனுப்பி அதன்மூலம் இணையத்தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தகவலை பதிவு செய்து வங்கிக் கணக்கு விபரங்களை மர்மநபர்கள் தெரிந்துகொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர்.
இதுமட்டுமல்லாது சபல புத்தி கொண்ட ஆண்களை குறிவைத்து பண மோசடி செய்கின்றனர். அதில் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு பெண்களின் கவர்ச்சி படங்கள், அரைகுறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை அனுப்பி வைக்கிறார்கள். பின் அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை காட்டி அதற்கு ரூ 3000 அனுப்புங்கள் என்று கூறி மோசடி செய்கின்றனர். இதை நம்பும் ஆண்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி ஏமாந்து போகின்றனர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பேசியதாவது, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்வது நாட்டில் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி மோசடி செய்வது வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சிப் படங்கள், நிர்வாண படங்களை அனுப்பி அவர்களிடம் பணத்தை மோசடி செய்கின்றனர். இதனை உண்மை என்று நம்பி சில ஆண்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஏமாந்து போகிறார்கள்.
மேலும் பணம் அனுப்பாத நபர்களை அந்த கும்பல்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீ செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று மிரட்டி அவர்களிடம் ரூ 2 ஆயிரத்திலிருந்து ரூ 4 ஆயிரம் வரை பணத்தை வாங்குகின்றனர். இது போன்ற நபர்களின் மிரட்டலுக்கு பயந்து சில பேர் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.
இதுபோன்ற மோசடி கும்பல் வடமாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு சிறிய கிராமத்தில் வங்கி கணக்கை வைத்து இருக்கும். அதில் பணம் வந்ததும் எடுத்து விடுவார்கள். இல்லையென்றால் அந்த கணக்கிலிருந்து வேறு கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவார்கள். இப்படி ஏமாற்றும் நபர்களை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆகவே இது தொடர்பாக இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.