சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவலூர் பகுதியில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளான். இந்நிலையில் சுதர்ஷன் கருவலூர் காளிபாளையம் பிரிவு அருகில் சைக்கிளில் சாலையை கடந்துள்ளான். அப்போது அன்னூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுதர்ஷனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சுதர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.