தமிழக அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினர். இதன் காரணமாக பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதாவது சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்தும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறைக்கு அரசு அனுமதி வழங்குகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.