தனியார் நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அருகிலுள்ள தலையம்பாளையம் பகுதியில் மயில்கள் சுற்றி திரிகின்றன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று காலையில் 7 மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அவ்வழியாக சென்ற நபர்கள், இச்சம்பவம் பற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மயிலை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.