Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நில உரிமையாளர் தான் காரணம்” டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுகடம்பூர் கிராமம் அம்மாச்சியார் கோவில் அருகே மதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி செய்து கொண்டிருந்த போது டிராக்டர் மண்ணில் சிக்கியது. இதனை மீட்பதற்காக விவசாயியான பாஸ்கர் என்பவர் வரவழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது டிராக்டர் மூலம் கயிறு கட்டி மண்ணில் சிக்கிய மற்றொரு டிராக்டரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே டிராக்டர் இழுக்க பாஸ்கரை அழைத்து சென்ற நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஸ்கரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் உறவினர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |