மாநகராட்சி நிராகத்தின் கீழ் போடப்படும் சாலைகள் குறைந்தது 3 வருடங்களுக்காவது உறுதியாக இருக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 5,270.33கி.மீ நீளத்திற்கு 34,630 உட்புற சாலைகளும், 387 கி.மீ நீளத்திற்கு பேருந்து சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் பெய்த கனமழையால் 1,000-ம் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து. இந்த சாலைகளை சீரமைப்பதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலின் காரணமாக தற்காலிகமாக சாலை பணிகள் நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிவடைந்ததால் மீண்டும் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 311.46 கி.மீ நீளமுள்ள, 1,654 பேருந்து மற்றும் உட்புற சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 615 சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து 799 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 42.32 கி.மீ தூரத்தில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சாலை அமைக்கும் பணியை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் சாலையை தரமானதாகவும், உறுதியானதாகவும் போட வேண்டும். இங்கு போடப்படும் சாலைகள் குறைந்தது 3 வருடங்களுக்காவது உறுதியாக இருக்க வேண்டும். மேலும் சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.