வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். அப்போது மானாமதுரை செல்லும் சாலையில் இருக்கும் கிணற்றுக்கு அருகே விக்னேஷ் பயன்படுத்திய செல்போன், கண்ணாடி, செருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றிலிருந்து விக்னேஷின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.