கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மேலும் அவரது கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வெப்படை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் காவல்துறையினர் மகேந்திரன் உடலை பார்வையிட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மகேந்திரன் கை கால்கள் கட்டுப்பட்டு இருந்ததால் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.