கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர் அசோக் குமார் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து இருவரும்பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர். இந்நிலையில் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வடுகபாளையம் அருகில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க எஞ்சினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்நிலையில் காரில் இருந்த இருவரும் உடனடியாக இறங்கியதால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். இது குறித்து மணிகண்டன் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.