பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சங்கநேரி பகுதியில் வைத்து இந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிவாரணத்திற்காக ஆவணங்களை பெற்று இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் முருகையன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, உமேஷ் பாபு, வெங்கடாச்சலம், விவசாய சங்க பிரதிநிதிகள் சுப்ரமணியன், சிவசந்திரன், பிரஸ்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவீந்திரன், முத்துப்பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் சாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் 15 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கவும், 30 நாட்களுக்குள் ஆவணம் வழங்கவேண்டிய விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.