நாளை (மார்ச்.26) மும்பை வான்கடே மைதானத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் கொரோனா காரணமாக குறிப்பிட்ட 3 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் அனைத்தையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி புனேவில் 15 லீக் போட்டிகளிலும், மும்பை வான்கடே, நேவி மும்பையில் 55 லீக் போட்டிகளும், நடைபெற உள்ளது. இருப்பினும் இன்னும் பிளே ஆஃப், இறுதிப் போட்டிக்கான மைதானங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. பெரும்பாலான போட்டிகள் மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளதால் 5 முறை கோப்பை வென்ற அணியும், உள்ளூர் அணியுமான மும்பை இந்தியன்ஸுக்கு இது சாதகமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, “தற்போது அணியில் உள்ள 70-80 சதவீதம் பேர் புதிய வீரர்கள். இதற்கு முன்னதாக மும்பையில் விளையாடிய அனுபவம் இவர்களுக்கு இல்லை. எனவே எங்களுக்கு மும்பையில் விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும் என்று கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மும்பை மண்ணில் நான், பும்ரா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கெய்ரன் பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே தற்போதைய மும்பை அணியில் இருந்து விளையாடியுள்ளோம். அதிலும் இங்கு கடந்த 2 வருடங்களாக நாங்கள் விளையாடவே இல்லை. எனவே எங்களுக்கு இந்த மைதானம் கூடுதல் சாதகமாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியுள்ளார்.