நடத்துனரை அரிவாளால் கொடூரமாக தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளிவிளை பகுதியில் ஜோசப் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் மைக்கல் ராஜை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோசப் மைக்கேல் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அதன்பிறகு ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் ஜோசப் மைக்கேல்ராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் அம்புரோஸ் மற்றும் ஜோகுமார் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக மைக்கேல்ராஜை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.