ஜவுளிக்கடை வியாபாரியிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை செந்தில் நகரில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கணேஷ்குமாரின் வாட்ஸப் மூலம் கடந்த 9-ஆம் தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கணேஷ்குமார் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கணேஷ்குமார் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் இடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.